Sunday, August 18, 2019

இன்னா நாற்பது



இன்னா நாற்பது குறிப்பிடும் இன்னாதவை

— தேமொழி — 



          சங்கம் மருவிய காலத்துப் பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றான 'இன்னா நாற்பது' என்பது மக்களை நல்வழிப்படுத்தும் அறவுரைகளை  40 வெண்பாக்களில்  வடித்துக்  கொடுக்கும் ஓர் சிறிய நூலாகும்.  இவற்றுடன் துவக்கத்தில் ஒரு கடவுள் வாழ்த்துப் பாடலும் உண்டு.  அப்பாடல் வைதிக சமயத்துக் கடவுளரான சிவன், பலராமன், திருமால், முருகன் ஆகிய கடவுளரைத் தொழவேண்டும் என்ற கருத்தை உரைக்கின்றது.  இப்பாடல் தவிர்த்து  இறை என்னும் பொருள் குறித்தவையாகவோ  இறைவழிபாடு, கடவுள், தெய்வம், இம்மை, மறுமை, ஆன்மா போன்ற சமயக் கருத்துக்களோ நூலெங்கிலும் காணப்படவில்லை.  கடவுள் வாழ்த்தைத் தவிர்த்து,  அறம்  வலியுறுத்தும் நோக்கம் கொண்ட  மற்ற 40 பாடல்களிலும் இறை நம்பிக்கை குறித்தும், நல்வழி நடத்தல் என்பதே மறுமையின் நல்வாழ்வுக்கு என்ற கருத்தும் காணப் பெறாததால் இக் கடவுள் வாழ்த்துப் பாடல் பிற்கால இடைச்செருகல் எனக் கருத வழியுண்டு.





          பதினெண்கீழ்க்கணக்கு  நூல்களில் 40 என்ற தொகை நூல்கள் என்ற சிறப்பைப் பெறுவன இன்னா நாற்பது, இனியவை நாற்பது, கார்நாற்பது, களவழி நாற்பது என்ற நான்கு நூல்கள் மட்டுமே. இவற்றுள் இன்னா நாற்பதும் இனியவை நாற்பதும் அறநூல்களாக மக்களை வாழ்வில் நெறிப்படுத்தும் கருத்துகளைக் கொண்டவை.  இன்னா நாற்பது வாழ்வில் எவையெவை  துன்பம் தருவன என்பவற்றை 'இன்னாதவை' எனக் குறிப்பிட்டுச் செல்கிறது. இன்னாதவை என்பவை பாடலின் பொருளுக்கேற்ப ‘இனிமையற்றவை' எனவோ அல்லது  ‘தகுதியற்றவை' எனவோ அல்லது 'பயனற்றவை' எனவோ பொருள் கொண்டு அமையும். இதற்கு மாறாக வாழ்வின் 'இனியவை' எவை என்று கூறி அறநெறியை வலியுறுத்துவது இனியவை நாற்பது.  இவையிரண்டையும் தவிர்த்து கார்நாற்பதும், களவழி நாற்பதும் முறையே தமிழுக்கே உரிய 'அகம்' 'புறம்' என்ற திணைகளைக்  கருப்பொருளாகக் கொண்டவை.

          இந்த நூலை  யாத்த புலவர் கபிலர் சங்க காலத்து மன்னனான பறம்பு மலையின் அரசன்  பாரி வள்ளலின் தோழராக அறியப்படும் கபிலர் அல்லர்.  இவர் அவருக்கும் பிற்காலத்தவர்.  ஆனால், இந்நூலுக்கு உரை எழுதிய ந. மு. வேங்கடசாமி நாட்டார் அவர்கள் ‘புலனழுக்கற்ற அந்தணாளன்' என்று பாராட்டப்பட்ட சங்கப் புலவர் கபிலர் என்றே தனது உரைநூலின் முகவுரையில் எழுதியுள்ளார்.  தமிழ் இலக்கிய  வரலாற்றில் ஔவை என்ற பெயர்கொண்ட புலவர் பலர் வாழ்ந்தது போல, கபிலர் என்ற பெயரிலும் புலவர் பலர் இருந்தனர். இன்னா நாற்பது எழுதிய புலவர் கபிலர் சங்கம் மருவிய காலற்றவர் ஆவார்.




          ஒவ்வொரு இன்னா நாற்பது பாடலும் நான்கு  துன்பம் தரும் தவிர்க்கப்படவேண்டிய கருத்துகளை இன்னா என்று உரைக்கிறது. ஆகவே, 164 (41 X 4) துன்பம் தருவனவற்றைப் பட்டியலிடுகிறார் நூலின் ஆசிரியர் கபிலர்.  கடவுள் வாழ்த்து தவிர்த்து, இன்னா நாற்பது கூறும் 160 அறநெறிகளைத் தனிமனிதருக்குரியவை எனவும்,   அரசைக் குறித்துச் சொல்வன எனவும்,   பொதுவானவை எனவும் பகுத்தும் காணலாம். அன்புடைமை, அறமுடைமை, அறிவுடைமை, ஒழுக்கமுடைமை, பொருளுடைமை, நட்பு, கடப்பாடு, ஒப்புரவு  குறித்த அறநெறி அறிவுரைகளின் தொகுப்பு இந்த வெண்பாக்கள்.  'இன்னா' எனக் காட்டப்படும்  ஒவ்வொரு கருத்தும்  தவிர்க்கப்பட வேண்டியவையாக, 41 பாடல்களின் ஒவ்வொரு வரிகளின் இறுதியிலும் இடம் பெறுவதால்  நூலுக்கு  இன்னா நாற்பது என்ற பெயரையும் பெற்றுத் தந்துள்ளது.

          ஒரு சில கருத்துகள், குறிப்பாக யானைப்படையின் தேவை போன்ற கருத்துகள் இக்காலத்திற்குப் பொருந்தாமல் போகலாம். அவை அக்கால வரலாற்று நிலையையும் வாழ்வியல் முறையையும்  அறியத் தருகின்றன.  எக்காலத்திற்கும் பொருந்துவதாகும் அறநெறிகள் கூறப்பட்டுள்ளன. தனிமனித ஒழுக்க நெறியை வலியுறுத்தி சமூகத்தின் வாழ்வியலை மேம்படுத்த உதவும் கருத்துகள் இன்னா நாற்பது நூலில் பலவுண்டு.




உதவிய நூல்: 
கபிலர் இயற்றிய 'இன்னா நாற்பது'— நாவலர் ந. மு. வேங்கடசாமி நாட்டாரவர்கள்
உரை, 1925, திருநெல்வேலி, தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழக வெளியீடு.
தமிழ் இணையக் கல்விக்கழகம் - பதிப்பு:
http://www.tamilvu.org/library/l2400/html/l2400bod.htm

நன்றி:
தமிழ் இலக்கியத் தொடரடைவு - முனைவர்.ப.பாண்டியராஜா
http://tamilconcordance.in/TABLE-INNA40-TEXT.html

___


இன்னா நாற்பது - அறிமுகம் 

கடவுள் வாழ்த்து - முக்கண் பகவன் அடி

1. பந்தம் இல்லாத மனையின்

2. பார்ப்பார் இல் கோழியும் நாயும்

3. கொடுங்கோல் மறமன்னர்

4. எருது இல் உழவர்க்கு

5. சிறை இல் கரும்பினை

6. அற மனத்தார் கூறும்

7. ஆற்றல் இலாதான்

8. பகல் போலும் நெஞ்சத்தார்

9. கள் இல்லா மூதூர்

10. பொருள் உணர்வார் இல்வழி

11. உடம்பாடு இல்லாத மனைவி

12. தலை தண்டமாக சுரம்

13. மணி இலா குஞ்சரம்

14. வணர் ஒலி ஐம்பாலார்

15. புல் ஆர் புரவி மணி

16. உண்ணாது வைக்கும் பெரும்பொருள்

17. ஆன்று அவிந்த சான்றோருள்

18. உரன் உடையான் உள்ளம்

19. குலத்து பிறந்தவன்

20. மாரி நாள் கூவும் குயிலின்

21. ஈத்த வகையால்

22. யானை இல் மன்னரை

23. சிறை இல்லா மூதூரின்

24. ஏமல் இல் மூதூர் இருத்தல்

25. நட்டார் இடுக்கண்கள்

26. பெரியாரோடு யாத்த

27. பெருமை உடையாரை

28. கல்லாதான் ஊரும் கலிமா

29. குறி அறியான் மாநாகம்

30. நெடு மரம் நீள் கோட்டு

31. பண் அமையா யாழின்

32. தன்னைத்தான் போற்றாது

33. கள் உண்பான் கூறும்

34. ஒழுக்கம் இலாளர்க்கு உறவு

35. எழிலி உறை நீங்கின்

36. பொருள் இலான் வேளாண்மை

37. நறிய மலர் பெரிது

38. பிறன் மனையாள் பின் நோக்கும்

39. கொடுக்கும் பொருள் இல்லான்

40. அடக்கம் உடையவன்






கடவுள் வாழ்த்து - முக்கண் பகவன் அடி






கடவுள் வாழ்த்து - முக்கண் பகவன் அடி


முக்கட் பகவ னடி தொழா தார்க்கின்னா
பொற்பனை வெள்ளையை யுள்ளா தொழுகின்னா
சக்கரத் தானை மறப்பின்னா வாங்கின்னா
சத்தியான் றாடொழா தார்க்கு.

சொல் பிரித்து பொருள் விளக்கம்:
முக்கண் பகவன் அடி தொழாதார்க்கு இன்னா
பொற்பனை வெள்ளையை உள்ளாது ஒழுகு இன்னா
சக்கரத்தானை மறப்பு இன்னா ஆங்கு இன்னா
சத்தியான் தாள் தொழாதார்க்கு

எவை துன்பம் தரும்:
முக்கண் கொண்ட சிவனை வழிபடாமை, 
பனைக்கொடி கொண்ட பலராமனை நினையாமை, 
சக்கரப்படை கொண்ட மாலவனை மறத்தல்,
சக்தியான் வேலவனை வணங்காமை, 
ஆகியன துன்பம் தருவனவாம்.

Mukkaṇ pakavaṉ aṭi toḻātārkku iṉṉā
poṟpaṉai veḷḷaiyai uḷḷātu oḻuku iṉṉā
cakkarattāṉai maṟappu iṉṉā āṅku iṉṉā
cattiyāṉ tāḷ toḻātārkku

---





1. பந்தம் இல்லாத மனையின்






1. பந்தம் இல்லாத மனையின்


பந்தமில் லாத மனையின் வனப்பின்னா
தந்தையில் லாத புதல்வ னழகின்னா
அந்தண ரில்லிருந் தூணின்னா1வாங்கின்னா
மந்திரம் வாயா விடின்.

சொல் பிரித்து பொருள் விளக்கம்:
பந்தம் இல்லாத மனையின் வனப்பு இன்னா
தந்தை இல்லாத புதல்வன் அழகு இன்னா
அந்தணர் இல் இருந்து ஊண் இன்னா ஆங்கு இன்னா
மந்திரம் வாயாவிடின்

எவை துன்பம் தரும்:
அன்பற்ற  இல்லாளின் அழகு, 
தந்தையை இழந்த மகனின் அழகு, 
துறவியர் வீட்டில் தங்கியிருந்து உண்டு வாழ்தல்,
மறைமொழி மந்திரங்கள் பயன் தராமை, 
ஆகியன துன்பம் தருவனவாம்.

Pantam illāta maṉaiyiṉ vaṉappu iṉṉā
tantai illāta putalvaṉ aḻaku iṉṉā
antaṇar il iruntu ūṇ iṉṉā āṅku iṉṉā
mantiram vāyāviṭiṉ

---





2. பார்ப்பார் இல் கோழியும் நாயும்






2. பார்ப்பார் இல் கோழியும் நாயும்


பார்ப்பாரிற் கோழியு நாயும் புகலின்னா
ஆர்த்த மனைவி யடங்காமை நன்கின்னா
பாத்தில் புடைவை யுடையின்னா வாங்கின்னா
காப்பாற்றா வேந்த னுலகு.

சொல் பிரித்து பொருள் விளக்கம்:
பார்ப்பார் இல் கோழியும் நாயும் புகல் இன்னா
ஆர்த்த மனைவி அடங்காமை நற்கு இன்னா
பாத்து இல் புடைவை உடை இன்னா ஆங்கு இன்னா
காப்பு ஆற்றா வேந்தன் உலகு

எவை துன்பம் தரும்:
பார்ப்பார் வீட்டினுள் கோழியும் நாயும் நுழைதல், 
கணவன் சொல்லுக்குக் கட்டுப்படாத மனைவி, 
பகுப்பு இல்லாத உடை அணிதல், 
காப்பாற்றாத அரசனின் ஆட்சியில் வாழ்வது, 
ஆகியன துன்பம் தருவனவாம்.

Pārppār il kōḻiyum nāyum pukal iṉṉā
ārtta maṉaivi aṭaṅkāmai naṟku iṉṉā
pāttu il puṭaivai uṭai iṉṉā āṅku iṉṉā
kāppu āṟṟā vēntaṉ ulaku

---





3. கொடுங்கோல் மறமன்னர்






3. கொடுங்கோல் மறமன்னர்


கொடுங்கோல் மறமன்னர் கீழ்வாழ்த லின்னா
நெடுநீர் புணையின்றி நீந்துத லின்னா
கடுமொழி யாளர் தொடர்பின்னா வின்னா
தடுமாறி வாழ்த லுயிர்க்கு.

சொல் பிரித்து பொருள் விளக்கம்:
கொடும் கோல் மற மன்னர் கீழ் வாழ்தல் இன்னா
நெடுநீர் புணை இன்றி நீந்துதல் இன்னா
கடுமொழியாளர் தொடர்பு இன்னா இன்னா
தடுமாறி வாழ்தல் உயிர்க்கு

எவை துன்பம் தரும்:
கொடுங்கோலாட்சி நடைபெறும் நாட்டில் வாழ்வது,  
நெடிய நீர்நிலையைப் படகின்றி நீந்திக் கடப்பது, 
கடுஞ்சொல் கூறுபவருடன் தொடர்பு கொண்டிருப்பது, 
நிம்மதி இழந்த மனதுடன் உயிர் வாழ்வது, 
ஆகியன துன்பம் தருவனவாம்.

Koṭum kōl maṟa maṉṉar kīḻ vāḻtal iṉṉā
neṭunīr puṇai iṉṟi nīntutal iṉṉā
kaṭumoḻiyāḷar toṭarpu iṉṉā iṉṉā
taṭumāṟi vāḻtal uyirkku

---





4. எருது இல் உழவர்க்கு






4. எருது இல் உழவர்க்கு


எருதி லுழவர்க்குப் போகீர மின்னா
கருவிகண் மாறிப் புறங்கொடுத்த லின்னா
திருவுடை யாரைச் செறலின்னா வின்னா
பெருவலியார்க் கின்னா செயல். 

சொல் பிரித்து பொருள் விளக்கம்:
எருது இல் உழவர்க்கு போகு ஈரம் இன்னா
கருவிகள் மாறி புறங்கொடுத்தல் இன்னா
திருவுடையாரை செறல் இன்னா இன்னா
பெரு வலியார்க்கு இன்னா செயல்

எவை துன்பம் தரும்:
உழவருக்கு ஏரோட்டுவதற்கு எருது இல்லாத பொழுது வயலின் ஈரம், 
போர்க்கருவி செயலிழந்த  நிலையில் புறமுதுகிட்டுத் தப்பிக்க நேரும் வீரரின் நிலை, 
செல்வந்தரிடம் சினம் கொண்டு பகையை வளர்த்துக் கொள்வது, 
வலிமை நிறைந்தவருக்குத் தீமை செய்தல், 
ஆகியன துன்பம் தருவனவாம்.

Erutu il uḻavarkku pōku īram iṉṉā
karuvikaḷ māṟi puṟaṅkoṭuttal iṉṉā
tiruvuṭaiyārai ceṟal iṉṉā iṉṉā
peru valiyārkku iṉṉā ceyal

---





5. சிறை இல் கரும்பினை






5. சிறை இல் கரும்பினை


சிறையில் கரும்பினைக் காத்தோம்ப லின்னா
உறைசேர் பழங்கூரை சேர்ந்தொழுக லின்னா
முறையின்றி யாளு மரசின்னா வின்னா
மறையின்றிச் செய்யும் வினை.

சொல் பிரித்து பொருள் விளக்கம்:
சிறை இல் கரும்பினை காத்து ஓம்பல் இன்னா
உறை சோர் பழம் கூரை சேர்ந்து ஒழுகல் இன்னா
முறை இன்றி ஆளும் அரசு இன்னா இன்னா
மறை இன்றி செய்யும் வினை

எவை துன்பம் தரும்:
வேலியற்ற கரும்புத்தோட்டத்தைக் காவல் செய்வது, 
மழைபெய்கையில் ஒழுகும் பழைய கூரை கொண்ட வீட்டில் வாழ்வது, 
நீதிநெறியற்ற அரசாட்சியில் வாழ்வது, 
யாவரும் அறியும் வகையில் வெளிப்படையாகச் செயலாற்றுவது, 
ஆகியன துன்பம் தருவனவாம்.

Ciṟai il karumpiṉai kāttu ōmpal iṉṉā
uṟai cōr paḻam kūrai cērntu oḻukal iṉṉā
muṟai iṉṟi āḷum aracu iṉṉā iṉṉā
maṟai iṉṟi ceyyum viṉai

---





6. அற மனத்தார் கூறும்






6. அற மனத்தார் கூறும்


அறமனத்தார் கூறுங் கடுமொழியு மின்னா
மறமனத்தார் ஞாட்பின் மடிந்தொழுக லின்னா
இடும்பை யுடையார் கொடையின்னா வின்னா
கொடும்பா டுடையார்வாய்ச் சொல்.

சொல் பிரித்து பொருள் விளக்கம்:
அற மனத்தார் கூறும் கடு மொழி இன்னா
மற மனத்தார் ஞாட்பில் மடிந்து ஒழுகல் இன்னா
இடும்பை உடையார் கொடை இன்னா இன்னா
கொடும்பாடு உடையார் வாய் சொல்

எவை துன்பம் தரும்:
அருள் மனம் கொண்ட அறவோர் சினந்து கூறும் கடுஞ்சொல், 
நெஞ்சுரம் கொண்ட வீரர் போர்க்களத்தில் செயலாற்றாது சோம்பியிருத்தல், 
வறுமையில் வாடுபவர் கொடையாளியாக இருத்தல், 
கொடியவர் கூறும் தீய சொல், 
ஆகியன துன்பம் தருவனவாம்.

Aṟa maṉattār kūṟum kaṭu moḻi iṉṉā
maṟa maṉattār ñāṭpil maṭintu oḻukal iṉṉā
iṭumpai uṭaiyār koṭai iṉṉā iṉṉā
koṭumpāṭu uṭaiyār vāy col

---





7. ஆற்றல் இலாதான்






7. ஆற்றல் இலாதான் 


ஆற்ற லிலாதான் பிடித்த படையின்னா
நாற்ற மிலாத மலரி னழகின்னா
தேற்ற மிலாதான் றுணிவின்னா வாங்கின்னா
மாற்ற மறியா னுரை.

சொல் பிரித்து பொருள் விளக்கம்:
ஆற்றல் இலாதான் பிடித்த படை இன்னா
நாற்றம் இலாத மலரின் அழகு இன்னா
தேற்றம் இலாதான் துணிவு இன்னா ஆங்கு இன்னா
மாற்றம் அறியான் உரை

எவை துன்பம் தரும்:
வலிமையற்றவன் கையில் ஏந்திய ஆயுதம், 
நறுமணமில்லாத மலரின் அழகு, 
தெளிவாக அறிந்திடாதவர் செய்யும் செயல், 
உரையாடலின் உட்பொருள் புரியாதவர் அளிக்கும் மறுமொழி, 
ஆகியன துன்பம் தருவனவாம்.

Āṟṟal ilātāṉ piṭitta paṭai iṉṉā
nāṟṟam ilāta malariṉ aḻaku iṉṉā
tēṟṟam ilātāṉ tuṇivu iṉṉā āṅku iṉṉā
māṟṟam aṟiyāṉ urai

---





8. பகல் போலும் நெஞ்சத்தார்






8. பகல் போலும் நெஞ்சத்தார் 


பகல்போலு நெஞ்சத்தார் பண்பின்மை யின்னா
நகையாய நண்பினார் நாரின்மை யின்னா
இகலி னெழுந்தவ ரோட்டின்னா வின்னா
நயமின் மனத்தவர் நட்பு.

சொல் பிரித்து பொருள் விளக்கம்:
பகல் போலும் நெஞ்சத்தார் பண்பு இன்மை இன்னா
நகை ஆய நண்பினார் நார் இன்மை இன்னா
இகலின் எழுந்தவர் ஓட்டு இன்னா இன்னா
நயம் இல் மனத்தவர் நட்பு

எவை துன்பம் தரும்:
சூரியஒளி போல தூய நெஞ்சம் கொண்டவர் பண்பற்றவராக இருப்பது, 
முகம் மலர சிரித்து மகிழும் தோழமை நெஞ்சத்தில் அன்பற்று இருப்பது, 
போரில் புறமுதுகிட்டு ஓடும் நிலை வருவது,
நீதியற்ற நெஞ்சம் கொண்டவர் நட்பு,  
ஆகியன துன்பம் தருவனவாம்.

Pakal pōlum neñcattār paṇpu iṉmai iṉṉā
nakai āya naṇpiṉār nār iṉmai iṉṉā
ikaliṉ eḻuntavar ōṭṭu iṉṉā iṉṉā
nayam il maṉattavar naṭpu

---





9. கள் இல்லா மூதூர்






9. கள் இல்லா மூதூர் 


கள்ளில்லா மூதூர் களிகட்கு நன்கின்னா
வள்ளல்க ளின்மை பரிசிலர்க்கு முன்னின்னா
வண்மை யிலாளர் வனப்பின்னா வாங்கின்னா
பண்ணில் புரவி பரிப்பு.

சொல் பிரித்து பொருள் விளக்கம்:
கள் இல்லா மூதூர் களிகட்கு நற்கு இன்னா
வள்ளல்கள் இன்மை பரிசிலர்க்கு முன் இன்னா
வண்மை இலாளர் வனப்பு இன்னா ஆங்கு இன்னா
பண் இல் புரவி பரிப்பு

எவை துன்பம் தரும்:
கள்ளுண்டு களிக்கும் குடிகாரர்களுக்குக்  கள் விற்பனையற்ற ஊரில் வாழ்வது, 
இரவலர்களுக்கு அவர்களுக்கு வழங்கும் வள்ளல்கள் இல்லாது போவது, 
ஈகை குணம் இல்லாதோருக்கு இருக்கும் அழகு, 
கடிவாளமற்ற குதிரையை இயக்குவது, 
ஆகியன துன்பம் தருவனவாம்.

Kaḷ illā mūtūr kaḷikaṭku naṟku iṉṉā
vaḷḷalkaḷ iṉmai paricilarkku muṉ iṉṉā
vaṇmai ilāḷar vaṉappu iṉṉā āṅku iṉṉā
paṇ il puravi parippu

---





10. பொருள் உணர்வார் இல்வழி





10. பொருள் உணர்வார் இல்வழி 


பொருளுணர்வா ரில்வழிப் பாட்டுரைத்த லின்னா
இருள்கூர் சிறுநெறி தாந்தனிப்போக் கின்னா
அருளில்லார் தங்கட் செலவின்னா வின்னா
பொருளில்லார் வண்மை புரிவு.

சொல் பிரித்து பொருள் விளக்கம்:
பொருள் உணர்வார் இல்வழி பாட்டு உரைத்தல் இன்னா
இருள் கூர் சிறு நெறி தாம் தனிப்போக்கு இன்னா
அருள் இல்லார்தம்கண் செலவு இன்னா இன்னா
பொருள் இல்லார் வண்மை புரிவு

எவை துன்பம் தரும்:
பொருளைப் புரிந்து கொள்ள இயலாதவரிடம் சென்று பாடலைப் படிப்பது, 
இருளடைந்துள்ள சின்னஞ்சிறு வீதியில் தனித்துப் போக நேர்வது, 
பொருள் வேண்டி கருணை மனமற்றவரை நாடிச் செல்லும் நிலை,  
வறுமை நிலையில் உள்ளோர் பிறருக்கு வழங்கி உதவ விரும்புவது, 
ஆகியன துன்பம் தருவனவாம்.

Poruḷ uṇarvār ilvaḻi pāṭṭu uraittal iṉṉā
iruḷ kūr ciṟu neṟi tām taṉippōkku iṉṉā
aruḷ illārtamkaṇ celavu iṉṉā iṉṉā
poruḷ illār vaṇmai purivu

---





11. உடம்பாடு இல்லாத மனைவி






11.  உடம்பாடு இல்லாத மனைவி


உடம்பா டில்லாத மனைவிதோ ளின்னா
இடனில் சிறியாரோ டியர்த்தநண் பின்னா
இடங்கழி யாளர் தொடர்பின்னா வின்னா
கடனுடையார் காணப் புகல்.

சொல் பிரித்து பொருள் விளக்கம்:
உடம்பாடு இல்லாத மனைவி தோள் இன்னா
இடன் இல் சிறியாரோடு யாத்த நண்பு இன்னா
இடங்கழியாளர் தொடர்பு இன்னா இன்னா
கடன் உடையார் காண புகல்

எவை துன்பம் தரும்:
விருப்பமற்ற மனைவியின் தோளினை அணைத்தல்,
பரந்த நோக்கு கொண்ட பெருந்தன்மை அறியா சிறுமதியாளரிடம் கொள்ளும் நட்பு 
நெறியற்ற வகை காமம் மிக்கவரைத் தோழமையாகக் கொள்வது, 
கடன் கொடுத்தவரைக் கடன்பட்டார் எதிர்கொள்ளும் நிலை, 
ஆகியன துன்பம் தருவனவாம்.

Uṭampāṭu illāta maṉaivi tōḷ iṉṉā
iṭaṉ il ciṟiyārōṭu yātta naṇpu iṉṉā
iṭaṅkaḻiyāḷar toṭarpu iṉṉā iṉṉā
kaṭaṉ uṭaiyār kāṇa pukal

---





12. தலை தண்டமாக சுரம்






12. தலை தண்டமாக சுரம்


தலைதண்ட மாகச் சுரம்போத லின்னா
வலைசுமந் துண்பான் பெருமித மின்னா
புலையுள்ளி வாழ்த லுயிர்க்கின்னா வின்னா
முலையில்லாள் பெண்மை விழைவு.

சொல் பிரித்து பொருள் விளக்கம்:
தலை தண்டமாக சுரம் போதல் இன்னா
வலை சுமந்து உண்பான் பெருமிதம் இன்னா
புலை உள்ளி வாழ்தல் உயிர்க்கு இன்னா இன்னா
முலை இல்லாள் பெண்மை விழைவு

எவை துன்பம் தரும்:
தலை பிளக்கும் வெயிலில் பாலைவனத்தில் செல்லுதல், 
வலையை வீசி வாழும் வாழ்க்கையை நடத்துபவர் அது குறித்துக் கொள்ளும் பெருமிதம், 
உயிரினங்களுக்குப் புலால் விரும்பி உண்டு வாழ்வோரின் வாழ்க்கைமுறை, 
பாலூட்டும் பெண்தன்மையை விரும்பும் முலையற்ற பெண்ணின்  விருப்பம், 
ஆகியன துன்பம் தருவனவாம்.

Talai taṇṭamāka curam pōtal iṉṉā
valai cumantu uṇpāṉ perumitam iṉṉā
pulai uḷḷi vāḻtal uyirkku iṉṉā iṉṉā
mulai illāḷ peṇmai viḻaivu

---





13. மணி இலா குஞ்சரம்






13. மணி இலா குஞ்சரம்


மணியிலாக் குஞ்சரம் வேந்தூர்த லின்னா
துணிவில்லார் சொல்லுந் தறுகண்மை யின்னா
பணியாத மன்னர்ப் பணிவின்னா வின்னா
பிணியன்னார் வாழு மனை.

சொல் பிரித்து பொருள் விளக்கம்:
மணி இலா குஞ்சரம் வேந்து ஊர்தல் இன்னா
துணிவு இல்லார் சொல்லும் தறுகண்மை இன்னா
பணியாத மன்னர் பணிவு இன்னா இன்னா
பிணி அன்னார் வாழும் மனை

எவை துன்பம் தரும்:
வரவை அறிவிக்கும் மணியோசை எழுப்பாத யானையில் அறிவிப்பின்றி அரசர் வருவது, 
பகையை வெல்லும் துணிவற்றவர் வெல்வேன் என்று சூளுரைப்பது, 
பணியாதவர் என்ற செருக்குடைய மன்னர் பணிவது, 
பீடிக்கும் நோய் போன்று கணவரை வருத்தும் மனைவியுடன் வாழ்வது, 
ஆகியன துன்பம் தருவனவாம்.

Maṇi ilā kuñcaram vēntu ūrtal iṉṉā
tuṇivu illār collum taṟukaṇmai iṉṉā
paṇiyāta maṉṉar paṇivu iṉṉā iṉṉā
piṇi aṉṉār vāḻum maṉai

---





14. வணர் ஒலி ஐம்பாலார்






14. வணர் ஒலி ஐம்பாலார்


வணரொலி யைம்பாலார் வஞ்சித்த லின்னா
துணர் தூங்கு மாவின் படுபழ மின்னா
புணர்பாவை யன்னார் பிரிவின்னா வின்னா
உணர்வா ருணராக் கடை.

சொல் பிரித்து பொருள் விளக்கம்:
வணர் ஒலி ஐம்பாலார் வஞ்சித்தல் இன்னா
துணர் தூங்கு மாவின் படு பழம் இன்னா
புணர் பாவை அன்னார் பிரிவு இன்னா இன்னா
உணர்வார் உணராக்கடை

எவை துன்பம் தரும்:
சுருண்ட அடர்ந்த கருங்கூந்தலை ஐந்து வகையில் அள்ளி முடிக்கும் பெண்கள் தம் அன்பரை ஏமாற்றுதல், 
கொத்தாகத் தொங்கும் மாம்பழங்கள் உண்பவர் இன்றி தானே அழுகிவிழும் நிலை, 
மனம் ஒத்து வாழ்ந்த பெண்ணைப் பிரிய நேர்வது, 
புரிந்துகொள்ளும் அறிவுடையவர் புரிந்து கொள்ளாமல் போவது, 
ஆகியன துன்பம் தருவனவாம்.

Vaṇar oli aimpālār vañcittal iṉṉā
tuṇar tūṅku māviṉ paṭu paḻam iṉṉā
puṇar pāvai aṉṉār pirivu iṉṉā iṉṉā
uṇarvār uṇarākkaṭai

---





15. புல் ஆர் புரவி மணி






15. புல் ஆர் புரவி மணி


புல்லார் புரவி மணியின்றி யூர்வின்னா
கல்லா ருரைக்குங் கருமப் பொருளின்னா
இல்லாதார் நல்ல விருப்பின்னா வாங்கின்னா
பல்லாரு ணாணப் படல்.

சொல் பிரித்து பொருள் விளக்கம்:
புல் ஆர் புரவி மணி இன்றி ஊர்வு இன்னா
கல்லார் உரைக்கும் கரும பொருள் இன்னா
இல்லாதார் நல்ல விழைவு இன்னா ஆங்கு இன்னா
பல்லாருள் நாணுப்படல்

எவை துன்பம் தரும்:
புல் உண்ணும் குதிரையின் மீது தன் வரவை அறிவிக்கும் மணியின்றி பயணிப்பது, 
பட்டறிவற்றவர் தரும் செயல்முறை விளக்க அறிவுரை, 
செல்வம் இல்லாதோர் சிறந்தவற்றை அடைய விரும்பும் விருப்பம், 
பலர் முன்னர் மானக்கேடு ஏற்பட்டு நாணும் நிலைக்கு உள்ளாவது,
ஆகியன துன்பம் தருவனவாம்.

Pul ār puravi maṇi iṉṟi ūrvu iṉṉā
kallār uraikkum karuma poruḷ iṉṉā
illātār nalla viḻaivu iṉṉā āṅku iṉṉā
pallāruḷ nāṇuppaṭal

---





16. உண்ணாது வைக்கும் பெரும்பொருள்






16. உண்ணாது வைக்கும் பெரும்பொருள்


உண்ணாது வைக்கும் பெரும்பொருள் வைப்பின்னா
நண்ணாப் பகைவர் புணர்ச்சி நனியின்னா
கண்ணி லொருவன் வனப்பின்னா வாங்கின்னா
எண்ணிலான் செய்யுங் கணக்கு.

சொல் பிரித்து பொருள் விளக்கம்:
உண்ணாது வைக்கும் பெரும் பொருள் வைப்பு இன்னா
நண்ணா பகைவர் புணர்ச்சி நனி இன்னா
கண் இல் ஒருவன் வனப்பு இன்னா ஆங்கு இன்னா
எண் இலான் செய்யும் கணக்கு

எவை துன்பம் தரும்:
உண்ணாது கருமித்தனத்துடன் சேர்க்கும் பெரும் செல்வம், 
உடன்பாடு இல்லாத பகைவருடன் சேருதல், 
பார்வையற்றவர் கொண்டிருக்கும் அழகு, 
கணக்கிடும் திறனற்றவர் வகுக்கும் திட்டம், 
ஆகியன துன்பம் தருவனவாம்.

Uṇṇātu vaikkum perum poruḷ vaippu iṉṉā
naṇṇā pakaivar puṇarcci naṉi iṉṉā
kaṇ il oruvaṉ vaṉappu iṉṉā āṅku iṉṉā
eṇ ilāṉ ceyyum kaṇakku

---





17. ஆன்று அவிந்த சான்றோருள்






17. ஆன்று அவிந்த சான்றோருள் 


ஆன்றவிந்த சான்றோருட் பேதை புகலின்னா
மான்றிருண்ட போழ்தின் வழங்கல் பெரிதின்னா
நோன்றவிந்து வாழாதார் நோன்பின்னா வாங்கின்னா
ஈன்றாளை யோம்பா விடல்.

சொல் பிரித்து பொருள் விளக்கம்:
ஆன்று அவிந்த சான்றோருள் பேதை புகல் இன்னா
மான்று இருண்ட போழ்தின் வழங்கல் பெரிது இன்னா
நோன்று அவிந்து வாழாதார் நோன்பு இன்னா ஆங்கு இன்னா
ஈன்றாளை ஓம்பா விடல்

எவை துன்பம் தரும்:
கல்வியிற் சிறந்த சான்றோர் அவையில் கல்லாத ஒருவர் பங்கு பெறும் நிலை, 
வாழ்வு இருண்டு போன பொழுதும் கொடையளிப்பது, 
துன்பங்களைச் சகித்துக்கொண்டு வாழத் தெரியாதவர் நோன்பு வாழ்வை மேற்கொள்வது, 
பெற்ற தாயைக் காப்பாற்றாமல் தவிக்கவிடுதல், 
ஆகியன துன்பம் தருவனவாம்.

Āṉṟu avinta cāṉṟōruḷ pētai pukal iṉṉā
māṉṟu iruṇṭa pōḻtiṉ vaḻaṅkal peritu iṉṉā
nōṉṟu avintu vāḻātār nōṉpu iṉṉā āṅku iṉṉā
īṉṟāḷai ōmpā viṭal

---





18. உரன் உடையான் உள்ளம்






18. உரன் உடையான் உள்ளம் 


உரனுடையா னுள்ள மடிந்திருத்த லின்னா
மறனுடை யாளுடையான் மார்பார்த்த லின்னா
சுரமரிய கானஞ் செலவின்னா வின்னா
மனவறி யாளர் தொடர்பு.

சொல் பிரித்து பொருள் விளக்கம்:
உரன் உடையான் உள்ளம் மடிந்திருத்தல் இன்னா
மறன் உடையான் ஆடையால் மார்பு ஆர்த்தல் இன்னா
சுரம் அரிய கானம் செலவு இன்னா இன்னா
மன வறியாளர் தொடர்பு

எவை துன்பம் தரும்:
திடமனத்தைக் கொண்டவர் மனம் இடிந்து போவது, 
வீர மறவர்களைக் கொண்டவர் முன் சென்று மார்தட்டி வலுச்சண்டைக்கு அழைப்பது, 
கொடுமையான காட்டின் வழி செய்யும் பயணம், 
சிறுமதி கொண்டோருடன் உறவு கொள்ளுதல், 
ஆகியன துன்பம் தருவனவாம்.

Uraṉ uṭaiyāṉ uḷḷam maṭintiruttal iṉṉā
maṟaṉ uṭaiyāṉ āṭaiyāl mārpu ārttal iṉṉā
curam ariya kāṉam celavu iṉṉā iṉṉā
maṉa vaṟiyāḷar toṭarpu

---





19. குலத்து பிறந்தவன்






19. குலத்து பிறந்தவன் 


குலத்துப் பிறந்தவன் கல்லாமை யின்னா
நிலத்திட்ட நல்வித்து நாறாமை யின்னா
நலத்தகையார் நாணாமை யின்னாவாங் கின்னா
கலத்தில் குலமில் வழி.

சொல் பிரித்து பொருள் விளக்கம்:
குலத்து பிறந்தவன் கல்லாமை இன்னா
நிலத்து இட்ட நல் வித்து நாறாமை இன்னா
நலத்தகையார் நாணாமை இன்னா ஆங்கு இன்னா
கலத்தல் குலம் இல் வழி

எவை துன்பம் தரும்:
நற்குடியில் பிறந்தவர் கல்வி கற்காதிருப்பது, 
நிலத்தில் விதைத்த நல்லவிதைகள் விளையாமல் போவது, 
நற்பண்பு கொண்டவர் பழியஞ்சாமல் இருப்பது, 
பண்பாட்டு விழுமியங்களில் வேறுபட்ட குடும்பங்கள் கொள்ளும் உறவு, 
ஆகியன துன்பம் தருவனவாம்.

Kulattu piṟantavaṉ kallāmai iṉṉā
nilattu iṭṭa nal vittu nāṟāmai iṉṉā
nalattakaiyār nāṇāmai iṉṉā āṅku iṉṉā
kalattal kulam il vaḻi

---





20. மாரி நாள் கூவும் குயிலின்






20. மாரி நாள் கூவும் குயிலின்


மாரிநாட் கூவுங் குயிலின் குரலின்னா
வீர மிலாளர் கடுமொழிக் கூற்றின்னா
மாரி வளம்பொய்ப்பி னூர்க்கின்னா வாங்கின்னா
மூரி யெருத்தா லுழவு

சொல் பிரித்து பொருள் விளக்கம்:
மாரி நாள் கூவும் குயிலின் குரல் இன்னா
வீரம் இலாளர் கடுமொழி கூற்று இன்னா
மாரி வளம் பொய்ப்பின் ஊர்க்கு இன்னா ஆங்கு இன்னா
மூரி எருத்தால் உழவு

எவை துன்பம் தரும்:
இளவேனில் காலம் தவறி மழைநாளில் துணைதேடிக் கூவும் குயிலின் குரல், 
அன்பில்லா நெஞ்சத்தவர் கூறும் கடுஞ்சொல், 
மழை வளம் பொய்த்துவிட்ட  உலகின் நிலை, 
கிழடு தட்டிய எருது பூட்டி செய்யும் உழவு, 
ஆகியன துன்பம் தருவனவாம்.

Māri nāḷ kūvum kuyiliṉ kural iṉṉā
vīram ilāḷar kaṭumoḻi kūṟṟu iṉṉā
māri vaḷam poyppiṉ ūrkku iṉṉā āṅku iṉṉā
mūri eruttāl uḻavu

---





21. ஈத்த வகையால்






21. ஈத்த வகையால் 


ஈத்த வகையா னுவவாதார்க் கீப்பின்னா
பாத்துண லில்லா ருழைச்சென் றுணலின்னா
மூத்த விடத்துப் பிணியின்னா வாங்கின்னா
ஓத்திலாப் பார்ப்பா னுரை.

சொல் பிரித்து பொருள் விளக்கம்:
ஈத்த வகையால் உவவாதார்க்கு ஈப்பு இன்னா
பாத்து உணல் இல்லாருழை சென்று உணல் இன்னா
மூத்த இடத்து பிணி இன்னா ஆங்கு இன்னா
ஓத்து இலா பார்ப்பான் உரை

எவை துன்பம் தரும்:
பெற்ற கொடையின் அளவு குறித்து மனம் நிறைந்து மகிழாதவர்களுக்குப் பொருள் கொடுப்பது, 
பகிர்ந்து உண்ணும் பண்பில்லாதவருடன் சேர்ந்து உணவு உண்பது, 
முதுமையில் நோய்வாய்ப்படல், 
மறை ஓதா பார்ப்பனர் கூற்று, 
ஆகியன துன்பம் தருவனவாம்.

Ītta vakaiyāl uvavātārkku īppu iṉṉā
pāttu uṇal illāruḻai ceṉṟu uṇal iṉṉā
mūtta iṭattu piṇi iṉṉā āṅku iṉṉā
ōttu ilā pārppāṉ urai

---





22. யானை இல் மன்னரை






22. யானை இல் மன்னரை


யானையின் மன்னரைக் காண்ட னனியின்னா
ஊனைத்தின் றூனைப் பெருக்குதல் முன்னின்னா
தேனெய் புளிப்பிற் சுவையின்னா வாங்கின்னா
கான்யா றிடையிட்ட வூர்.

சொல் பிரித்து பொருள் விளக்கம்:
யானை இல் மன்னரை காண்டல் நனி இன்னா
ஊனை தின்று ஊனை பெருக்குதல் முன் இன்னா
தேன் நெய் புளிப்பின் சுவை இன்னா ஆங்கு இன்னா
கான் யாறு இடையிட்ட ஊர்

எவை துன்பம் தரும்:
யானைப்படை இல்லா மன்னரைக் காண்பது, 
பிற உயிர்களின் உடலை உண்டு தன் உடலை வளர்த்துக் கொள்வது, 
தேனும் நெய்யும் திரிந்து புளிப்புச் சுவை பெற்றுவிடுதல்,
காட்டாறுகளுக்கு இடைப்பட்ட நிலத்தில் உள்ள ஊரில் வாழ்வது, 
ஆகியன துன்பம் தருவனவாம்.

Yāṉai il maṉṉarai kāṇṭal naṉi iṉṉā
ūṉai tiṉṟu ūṉai perukkutal muṉ iṉṉā
tēṉ ney puḷippiṉ cuvai iṉṉā āṅku iṉṉā
kāṉ yāṟu iṭaiyiṭṭa ūr

---





23. சிறை இல்லா மூதூரின்






23. சிறை இல்லா மூதூரின்


சிறையில்லாத மூதூரின் வாயில்காப் பின்னா
துறையிருந் தாடை கழுவுத லின்னா
அறைபறை யன்னவர் சொல்லின்னா வின்னா
நிறையில்லான் கொண்ட தவம்.

சொல் பிரித்து பொருள் விளக்கம்:
சிறை இல்லா மூதூரின் வாயில் காப்பு இன்னா
துறை இருந்து ஆடை கழுவுதல் இன்னா
அறை பறை அன்னார் சொல் இன்னா இன்னா
நிறை இலான் கொண்ட தவம்

எவை துன்பம் தரும்:
மதில் இல்லாத ஊரின் வாயிலைக் காத்தல், 
குடிநீருக்காக உள்ள நீர்நிலையில் உடைகளைத் துவைத்தல், 
பறை அறிவிப்பது போன்று அலர் பரப்புவோர் சொல், 
புலனடக்கமற்றவருக்குத் தவம் செய்வது, 
ஆகியன துன்பம் தருவனவாம்.

Ciṟai illā mūtūriṉ vāyil kāppu iṉṉā
tuṟai iruntu āṭai kaḻuvutal iṉṉā
aṟai paṟai aṉṉār col iṉṉā iṉṉā
niṟai ilāṉ koṇṭa tavam

---





24. ஏமல் இல் மூதூர் இருத்தல்






24. ஏமல் இல் மூதூர் இருத்தல்


ஏமமில் மூதூ ரிருத்தன் மிகவின்னா
தீமை யுடையா ரயலிருத்த னன்கின்னா
காமமுதிரி னுயிர்க்கின்னா வாங்கின்னா
யாமென் பவரொடு நட்பு.

சொல் பிரித்து பொருள் விளக்கம்:
ஏமல் இல் மூதூர் இருத்தல் மிக இன்னா
தீமை உடையார் அயல் இருத்தல் நற்கு இன்னா
காமம் முதிரின் உயிர்க்கு இன்னா ஆங்கு இன்னா
யாம் என்பவரோடு நட்பு

எவை துன்பம் தரும்:
காவல் இல்லாத ஊரில் வாழ்வது, 
தீய செயல்களைச் செய்வோர் அருகில் வாழ்வது, 
காம நோய் முற்றி உயிர் வாழ்வது, 
தன்நலம் நிறைந்தவருடன் வாழ்வது, 
ஆகியன துன்பம் தருவனவாம்.

Ēmal il mūtūr iruttal mika iṉṉā
tīmai uṭaiyār ayal iruttal naṟku iṉṉā
kāmam mutiriṉ uyirkku iṉṉā āṅku iṉṉā
yām eṉpavarōṭu naṭpu

---





25. நட்டார் இடுக்கண்கள்






25. நட்டார் இடுக்கண்கள்


நட்டா ரிடுக்கண்கள் காண்டல் நனியின்னா
ஒட்டார் பெருமிதங் காண்டல் பெரிதின்னா
கட்டில்லா மூதூ ருறையின்னா வாங்கின்னா
நட்ட கவற்றினாற் சூது.

சொல் பிரித்து பொருள் விளக்கம்:
நட்டார் இடுக்கண்கள் காண்டல் நனி இன்னா
ஒட்டார் பெருமிதம் காண்டல் பெரிது இன்னா
கட்டு இலா மூதூர் உறைவு இன்னா ஆங்கு இன்னா
நட்ட கவற்றினால் சூது

எவை துன்பம் தரும்:
நட்புடையவர் படும் துயரைக் காணுவது,
பகைவரின் வெற்றிச் செருக்கைக் காணுவது, 
உறவுகள் இல்லாத ஊரில் வாழ்வது, 
சூதாடும் கட்டை உருட்டி விரும்பிச் சூதாடுவது,  
ஆகியன துன்பம் தருவனவாம்.

Naṭṭār iṭukkaṇkaḷ kāṇṭal naṉi iṉṉā
oṭṭār perumitam kāṇṭal peritu iṉṉā
kaṭṭu ilā mūtūr uṟaivu iṉṉā āṅku iṉṉā
naṭṭa kavaṟṟiṉāl cūtu

---





26. பெரியாரோடு யாத்த






26. பெரியாரோடு யாத்த


பெரியாரோ டியாத்த தொடர்விடுத லின்னா
அரியவை செய்து மெனவுரைத்த லின்னா
பரியார்க்குத் தாமுற்ற கூற்றின்னா வின்னா
பெரியோர்க்குத் தீய செயல்.

சொல் பிரித்து பொருள் விளக்கம்:
பெரியாரோடு யாத்த தொடர் விடுதல் இன்னா
அரியவை செய்தும் என உரைத்தல் இன்னா
பரியார்க்கு தாம் உற்ற கூற்று இன்னா இன்னா
பெரியார்க்கு தீய செயல்

எவை துன்பம் தரும்:
பெரியவர்களுடன் கொண்ட உறவைத் துண்டித்துக் கொள்வது, 
செய்தற்கரிய காரியங்களைச் செய்து உதவுவதாக வாக்களிப்பது, 
பரிவு காட்டாதவரிடம்  சென்று தனது துயர் சொல்லிப் புலம்புவது, 
பெரியவர்களுக்குத் தீங்கு செய்வது, 
ஆகியன துன்பம் தருவனவாம்.

Periyārōṭu yātta toṭar viṭutal iṉṉā
ariyavai ceytum eṉa uraittal iṉṉā
pariyārkku tām uṟṟa kūṟṟu iṉṉā iṉṉā
periyārkku tīya ceyal

---





27. பெருமை உடையாரை






27. பெருமை உடையாரை 


பெருமை யுடையாரைப் பீடழித்த லின்னா
கிழமை யுடையார்க் களைந்திடுத லின்னா
வளமை யிலாளர் வனப்பின்னா வின்னா
இளமையுண் மூப்புப் புகல்.


சொல் பிரித்து பொருள் விளக்கம்:
பெருமை உடையாரை பீடு அழித்தல் இன்னா
கிழமை உடையாரை கீழ்ந்திடுதல் இன்னா
வளமை இலாளர் வனப்பு இன்னா இன்னா
இளமையுள் மூப்பு புகல்

எவை துன்பம் தரும்:
பெருமை மிக்க ஒருவரின் மதிப்பைக் குறைத்தல்,
உரிமையுடையவரின் உரிமையைப் பறித்துவிடுதல்,
செல்வமற்ற ஒருவர் கொண்டிருக்கும் அழகு, 
இளவயதில் தள்ளாமை ஏற்படுவது,
ஆகியன துன்பம் தருவனவாம்.

Perumai uṭaiyārai pīṭu aḻittal iṉṉā
kiḻamai uṭaiyārai kīḻntiṭutal iṉṉā
vaḷamai ilāḷar vaṉappu iṉṉā iṉṉā
iḷamaiyuḷ mūppu pukal

---





28. கல்லாதான் ஊரும் கலிமா






28. கல்லாதான் ஊரும் கலிமா


கல்லாதா னூருங் கலிமாப் பரிப்பின்னா
வல்லாதான் சொல்லு முரையின் பயனின்னா
இல்லார்வாய்ச் சொல்லி னயமின்னா வாங்கின்னா
கல்லாதான் கோட்டி கொளல்.

சொல் பிரித்து பொருள் விளக்கம்:
கல்லாதான் ஊரும் கலிமா பரிப்பு இன்னா
வல்லாதான் சொல்லும் உரையின் பயன் இன்னா
இல்லாதார் வாய் சொல்லின் நயம் இன்னா ஆங்கு இன்னா
கல்லாதான் கோட்டி கொளல்

எவை துன்பம் தரும்:
குதிரையேற்றம் பயிலாதவர் குதிரையைச் செலுத்துதல்,
வலிமையற்றவரின் வெற்றுப் பேச்சு,  
பொருள் இல்லாதவரின் நயமான பேச்சு,  
கற்றவர் அவையில் கல்லாதவரின் பேச்சு, 
ஆகியன துன்பம் தருவனவாம்.

Kallātāṉ ūrum kalimā parippu iṉṉā
vallātāṉ collum uraiyiṉ payaṉ iṉṉā
illātār vāy colliṉ nayam iṉṉā āṅku iṉṉā
kallātāṉ kōṭṭi koḷal

---





29. குறி அறியான் மாநாகம்






29. குறி அறியான் மாநாகம்


குறியறியான் மாநாக மாட்டுவித்த லின்னா
தறியறியா னீரின்கட் பாய்ந்தாட லின்னா
அறிவறியா மக்கட் பெறலின்னா வின்னா
செறிவிலான் கேட்ட மறை.

சொல் பிரித்து பொருள் விளக்கம்:
குறி அறியான் மா நாகம் ஆட்டுவித்தல் இன்னா
தறி அறியான் கீழ் நீர் பாய்ந்தாடுதல் இன்னா
அறிவு அறியா மக்கள் பெறல் இன்னா இன்னா
செறிவு இலான் கேட்ட மறை

எவை துன்பம் தரும்:
வித்தை அறியாதவர் பெரியதொரு பாம்பை ஆட்டுவிக்க முற்படுதல், 
நீரின் ஆழம் அறியாமல் நீர்நிலையில் குதித்து நீந்துதல், 
கற்க விரும்பாத அறிவற்ற மக்களைப் பெறுதல், 
கட்டுப்பாடு இல்லாதவர் தாம் அறிந்த முக்கியமான செய்தியைக் கையாளும் முறை, 
ஆகியன துன்பம் தருவனவாம்.

Kuṟi aṟiyāṉ mā nākam āṭṭuvittal iṉṉā
taṟi aṟiyāṉ kīḻ nīr pāyntāṭutal iṉṉā
aṟivu aṟiyā makkaḷ peṟal iṉṉā iṉṉā
ceṟivu ilāṉ kēṭṭa maṟai

---





30. நெடு மரம் நீள் கோட்டு






30. நெடு மரம் நீள் கோட்டு


நெடுமர நீள்கோட் டுயர்பாய்த லின்னா
கடுஞ்சின வேழத் தெதிர்சேற லின்னா
ஒடுங்கி யரவுறையு மில்லின்னா வின்னா
கடும்புலி வாழு மதர்.

சொல் பிரித்து பொருள் விளக்கம்:
நெடு மரம் நீள் கோட்டு உயர் பாய்தல் இன்னா
கடும் சின வேழத்து எதிர் சேறல் இன்னா
ஒடுங்கி அரவு உறையும் இல் இன்னா இன்னா
கடும் புலி வாழும் அதர்

எவை துன்பம் தரும்:
நெடிதுயர்ந்த மரத்தின் உச்சியில் உள்ள நுனிக் கொம்பில் ஏறி கீழே குதித்தல், 
மதம் கொண்ட யானையின் முன் செல்வது,
பாம்புப் புற்றில் கை நுழைப்பது,
கொடிய புலி வாழும் காட்டிற்குச் செல்வது, 
ஆகியன துன்பம் தருவனவாம்.

Neṭu maram nīḷ kōṭṭu uyar pāytal iṉṉā
kaṭum ciṉa vēḻattu etir cēṟal iṉṉā
oṭuṅki aravu uṟaiyum il iṉṉā iṉṉā
kaṭum puli vāḻum atar

---





31. பண் அமையா யாழின்






31. பண் அமையா யாழின்


பண்ணமையா யாழின்கீழ்ப் பாடல் பெரிதின்னா
எண்ணறியா மாந்தர் ஒழுக்குநாட் கூற்றின்னா
மண்ணின் முழவி னொலியின்னா வாங்கின்னா
தண்மை யிலாளர் பகை.

சொல் பிரித்து பொருள் விளக்கம்:
பண் அமையா யாழின் கீழ் பாடல் பெரிது இன்னா
எண் அறியா மாந்தர் ஒழுக்கு நாள் கூற்று இன்னா
மண் இல் முழவின் ஒலி இன்னா ஆங்கு இன்னா
தண்மை இலாளர் பகை

எவை துன்பம் தரும்:
இசை கூட்டாத யாழுடன் இசைந்து பாட விரும்புவது, 
கோள்களின் நிலையைக் கணிக்கும் வகை அறியாதவர் நேரத்தைக் குறித்துக் கொடுப்பது, 
தாளலயத்தைக் கூட்ட மத்தளத்தில் கரிய சாந்து பூசாத பொழுது அதை இசைப்பது, 
பண்பில்லாதவரைப் பகைத்துக் கொள்வது, 
ஆகியன துன்பம் தருவனவாம்.

Paṇ amaiyā yāḻiṉ kīḻ pāṭal peritu iṉṉā
eṇ aṟiyā māntar oḻukku nāḷ kūṟṟu iṉṉā
maṇ il muḻaviṉ oli iṉṉā āṅku iṉṉā
taṇmai ilāḷar pakai

---





32. தன்னைத்தான் போற்றாது






32. தன்னைத்தான் போற்றாது


தன்னைத்தான் போற்றா தொழுகுத னன்கின்னா
முன்னை யுரையார் புறமொழிக் கூற்றின்னா
நன்மை யிலாளர் தொடர்பின்னா வாங்கின்னா
தொன்மை யுடையார் கெடல்.

சொல் பிரித்து பொருள் விளக்கம்:
தன்னைத்தான் போற்றாது ஒழுகுதல் நன்கு இன்னா
முன்னை உரையார் புறமொழி கூற்று இன்னா
நன்மை இலாளர் தொடர்பு இன்னா ஆங்கு இன்னா
தொன்மை உடையார் கெடல்

எவை துன்பம் தரும்:
தனது வாழ்வையும் நலத்தையும் பேணாது வாழ்வது, 
நேரடியாகக் கூறாமல் புறம் பேசுவது, 
பண்பற்றவருடன் கொள்ளும் நட்பு, 
வாழ்வாங்கு வாழ்ந்தவரின் நிலை தாழ்தல், 
ஆகியன துன்பம் தருவனவாம்.

Taṉṉaittāṉ pōṟṟātu oḻukutal naṉku iṉṉā
muṉṉai uraiyār puṟamoḻi kūṟṟu iṉṉā
naṉmai ilāḷar toṭarpu iṉṉā āṅku iṉṉā
toṉmai uṭaiyār keṭal

---





33. கள் உண்பான் கூறும்






33. கள் உண்பான் கூறும்


கள்ளுண்பான் கூறுங் கருமப் பொருளின்னா
முள்ளுடைக் காட்டி னடத்த னனியின்னா
வெள்ளம் படுமாக் கொலையின்னா வாங்கின்னா
கள்ள மனத்தார் தொடர்பு.

சொல் பிரித்து பொருள் விளக்கம்:
கள் உண்பான் கூறும் கரும பொருள் இன்னா
முள்ளுடை காட்டில் நடத்தல் நனி இன்னா
வெள்ளம் படு மா கொலை இன்னா ஆங்கு இன்னா
கள்ள மனத்தார் தொடர்பு

எவை துன்பம் தரும்:
குடிபோதைக்கு அடிமையானவர் செய்வேன் எனக் கொடுக்கும் வாக்குறுதி,
முட்கள் நிறைந்த காட்டில்  நடந்து பயணப்படுதல், 
வெள்ளத்தில் சிக்கிய விலங்குக்குத் தப்ப உதவாமல் அதனைச் சாக விடுதல்,  
வஞ்சனை செய்யும் நெஞ்சத்தோருடன் கொள்ளும் உறவு, 
ஆகியன துன்பம் தருவனவாம்.

Kaḷ uṇpāṉ kūṟum karuma poruḷ iṉṉā
muḷḷuṭai kāṭṭil naṭattal naṉi iṉṉā
veḷḷam paṭu mā kolai iṉṉā āṅku iṉṉā
kaḷḷa maṉattār toṭarpu

---





34. ஒழுக்கம் இலாளர்க்கு உறவு






34. ஒழுக்கம் இலாளர்க்கு உறவு


ஒழுக்க மிலாளார்க் குறவுரைத்த லின்னா
விழுத்தகு நூலும் விழையாதார்க் கின்னா
இழித்த தொழிலவர் நட்பின்னா வின்னா
கழிப்புவாய் மண்டிலங் கொட்பு.

சொல் பிரித்து பொருள் விளக்கம்:
ஒழுக்கம் இலாளர்க்கு உறவு உரைத்தல் இன்னா
விழுத்தகு நூலும் விழையாதார்க்கு இன்னா
இழித்த தொழிலவர் நட்பு இன்னா இன்னா
கழிப்பு வாய் மண்டிலம் கொட்பு

எவை துன்பம் தரும்:
நல்லொழுக்கம் இல்லாத ஒருவரைத் தனது உறவு எனக் கூறிக் கொள்ளுதல், 
நன்னெறி நூல்களை விரும்பி கல்லாதிருப்பது, 
அறநெறியற்ற செயல்களில் ஈடுபடுவோருடன் உறவாடுவது, 
நல்லவர்கள் செல்வதைத் தவிர்க்கும் இடத்திற்குச் செல்லுதல், 
ஆகியன துன்பம் தருவனவாம்.

Oḻukkam ilāḷarkku uṟavu uraittal iṉṉā
viḻuttaku nūlum viḻaiyātārkku iṉṉā
iḻitta toḻilavar naṭpu iṉṉā iṉṉā
kaḻippu vāy maṇṭilam koṭpu

---





35. எழிலி உறை நீங்கின்






35. எழிலி உறை நீங்கின்


எழிலி யுறைநீங்கி னீண்டையார்க் கின்னா
குழலி னினிய மரத் தோசைநன் கின்னா
குழவிக ளுற்ற பிணியின்னா வின்னா
அழகுடையான் பேதை யெனல்.

சொல் பிரித்து பொருள் விளக்கம்:
எழிலி உறை நீங்கின் ஈண்டையார்க்கு இன்னா
குழல் இல் இயமரத்து ஓசை நற்கு இன்னா
குழவிகள் உற்ற பிணி இன்னா இன்னா
அழகுடையான் பேதை எனல்

எவை துன்பம் தரும்:
முகில் உலக மக்களுக்குத் தேவையான மழையைத் தராது போதல், 
குழல் தரும் காய்ந்த மூங்கில்கள் காற்றில் ஒன்றோடொன்று உராய்ந்து எழுப்பும் ஓசை, 
குழந்தைகள் நோய் வாய்ப்படுவது, 
அழகுடையவர் அறிவற்றவராகவும் இருந்துவிடுவது, 
ஆகியன துன்பம் தருவனவாம்.

Eḻili uṟai nīṅkiṉ īṇṭaiyārkku iṉṉā
kuḻal il iyamarattu ōcai naṟku iṉṉā
kuḻavikaḷ uṟṟa piṇi iṉṉā iṉṉā
aḻakuṭaiyāṉ pētai eṉal

---





36. பொருள் இலான் வேளாண்மை






36. பொருள் இலான் வேளாண்மை


பொருளிலான் வேளாண்மை காமுறுத லின்னா
நெடுமாட நீணகர்க் கைத்தின்மை ன்னா
வருமனை பார்த்திருந் தூணின்னா வின்னா
கெடுமிடங் கைவிடுவார் நட்பு.

சொல் பிரித்து பொருள் விளக்கம்:
பொருள் இலான் வேளாண்மை காமுறுதல் இன்னா
நெடு மாட நீள் நகர் கைத்து இன்மை இன்னா
வரு மனை பார்த்திருந்து ஊண் இன்னா இன்னா
கெடும் இடம் கைவிடுவார் நட்பு

எவை துன்பம் தரும்:
செல்வமற்றவர் பிறருக்கு உதவ விரும்புதல், 
உயர்ந்த மாடமாளிகைகள் உள்ள செல்வச் செழிப்புள்ள பெரிய நகரில் பொருளின்றி வறுமையில் வாழ்வது, 
வந்து உணவளிப்பவரை எதிர்நோக்கியிருந்து உணவு பெறும் நிலை, 
வாழ்வின் வறுமை எய்தும் பொழுது கைவிட்டு விலகிச் செல்லும் நட்பு, 
ஆகியன துன்பம் தருவனவாம்.

Poruḷ ilāṉ vēḷāṇmai kāmuṟutal iṉṉā
neṭu māṭa nīḷ nakar kaittu iṉmai iṉṉā
varu maṉai pārttiruntu ūṇ iṉṉā iṉṉā
keṭum iṭam kaiviṭuvār naṭpu

---





37. நறிய மலர் பெரிது






37. நறிய மலர் பெரிது 


நறிய மலர்பெரிது நாறாமை யின்னா
துறையறியா னீரிழிந்து போகுத லின்னா
அறியான் வினாப்படுத லின்னாவாங் கின்னா
சிறியார்மேற் செற்றங் கொளல்.

சொல் பிரித்து பொருள் விளக்கம்:
நறிய மலர் பெரிது நாறாமை இன்னா
துறை அறியான் நீர் இழிந்து போகுதல் இன்னா
அறியான் வினாப்படுதல் இன்னா ஆங்கு இன்னா
சிறியார் மேல் செற்றம் கொளல்

எவை துன்பம் தரும்:
கவரும் அழகுள்ள மலருக்கு நறுமணம் இல்லாதிருப்பது, 
அடையவேண்டிய கரையின் தொலைவு அறியாது நீரில் இறங்கி நீந்துவது, 
விடை அறியாதவர்  கேள்விகளை எதிர்கொள்வது,  
சிறியோர் மீது சீற்றம் கொள்வது, 
ஆகியன துன்பம் தருவனவாம்.

Naṟiya malar peritu nāṟāmai iṉṉā
tuṟai aṟiyāṉ nīr iḻintu pōkutal iṉṉā
aṟiyāṉ viṉāppaṭutal iṉṉā āṅku iṉṉā
ciṟiyār mēl ceṟṟam koḷal

---





38. பிறன் மனையாள் பின் நோக்கும்






38. பிறன் மனையாள் பின் நோக்கும்


பிறன்மனையாள் பின்னோக்கும் பேதைமை யின்னா
மறமிலா மன்னர் செருப்புகுத லின்னா
வெறும்புறம் வெம்புரவி யேற்றின்னா வின்னா
திறனிலான் செய்யும் வினை.

சொல் பிரித்து பொருள் விளக்கம்:
பிறன் மனையாள் பின் நோக்கும் பேதைமை இன்னா
மறம் இலா மன்னர் செரு புகுதல் இன்னா
வெறும் புறம் வெம் புரவி ஏற்று இன்னா இன்னா
திறன் இலான் செய்யும் வினை

எவை துன்பம் தரும்:
மற்றொருவரின் மனைவி மேல் காமுறும் அறிவின்மை, 
வீரமற்ற மன்னர் போருக்குச் செல்லுதல், 
விரைந்தோடும் குதிரை மீது சேணம்  இல்லாது பயணிப்பது, 
தொழிலில் திறமையற்றவர் செய்யும் பணி, 
ஆகியன துன்பம் தருவனவாம்.

Piṟaṉ maṉaiyāḷ piṉ nōkkum pētaimai iṉṉā
maṟam ilā maṉṉar ceru pukutal iṉṉā
veṟum puṟam vem puravi ēṟṟu iṉṉā iṉṉā
tiṟaṉ ilāṉ ceyyum viṉai

---





39. கொடுக்கும் பொருள் இல்லான்






39. கொடுக்கும் பொருள் இல்லான்


கொடுக்கும் பொருளில்லான் வள்ளன்மை யின்னா
கடித்தமைந்த பாக்கினுட் கற்படுத லின்னா
கொடுத்து விடாமை கவிக்கின்னா வின்னா
மடுத்துழிப் பாடா விடல்.

சொல் பிரித்து பொருள் விளக்கம்:
கொடுக்கும் பொருள் இல்லான் வள்ளன்மை இன்னா
கடித்து அமைந்த பாக்கினுள் கல் படுதல் இன்னா
கொடுத்து விடாமை கவிக்கு இன்னா இன்னா
மடுத்துழி பாடா விடல்

எவை துன்பம் தரும்:
கொடுப்பதற்குப் பொருளைக் கொண்டிராதவரின் ஈகை குணம்,
பாக்கை மெல்லும்பொழுது இடைப்படும் கல்,
புகழ்ந்து பாடும் பாவலருக்குப் பரிசு அளிக்காமை,
தடங்கல் ஏற்பட்டதால் தொடங்கிய பாடலை முடிக்காமல் விடுதல்,
ஆகியன துன்பம் தருவனவாம்.

Koṭukkum poruḷ illāṉ vaḷḷaṉmai iṉṉā
kaṭittu amainta pākkiṉuḷ kal paṭutal iṉṉā
koṭuttu viṭāmai kavikku iṉṉā iṉṉā
maṭuttuḻi pāṭā viṭal

---





40. அடக்கம் உடையவன்






40. அடக்கம் உடையவன்


அடக்க முடையவன் மீளிமை யின்னா
துடக்க மிலாதவன் றற்செருக் கின்னா
அடைக்கலம் வவ்வுத லின்னாவாங் கின்னா
அடக்க வடங்காதார் சொல்.

சொல் பிரித்து பொருள் விளக்கம்:
அடக்கம் உடையவன் மீளிமை இன்னா
தொடக்கம் இலாதவன் தற்செருக்கு இன்னா
அடைக்கலம் வவ்வுதல் இன்னா ஆங்கு இன்னா
அடக்க அடங்காதார் சொல்

எவை துன்பம் தரும்:
ஐம்புலன்களையும் அடக்கும் தன்மையுடையவனின் பெருமிதம்,
முயற்சியில்லாதவன் தற்பெருமைப் பேசுதல்,
பிறர் அடைக்கலமாக ஒப்புவித்த பொருளை உரிமையாக்கிக் கொள்ளுதல்,
அறிவுரையை மதிக்காதோருக்குக் கூறும் ஆலோசனை,  
ஆகியன துன்பம் தருவனவாம்.

Aṭakkam uṭaiyavaṉ mīḷimai iṉṉā
toṭakkam ilātavaṉ taṟcerukku iṉṉā
aṭaikkalam vavvutal iṉṉā āṅku iṉṉā
aṭakka aṭaṅkātār col

---